கண்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சினைகள் - பகுதி 1 | Eye Problems


கண் என்பது மனித உடலின் ஓர் முக்கியமான உறுப்பு. கண்களில் ஏற்படும் சில பொதுவான பிரச்சினைகளை சுயமாகவே சரி செய்துகொள்ளும் ஆற்றலை எமது கண்கள் பெற்றுள்ளன. இன்னும் எமது கண்களில் ஏற்படும் சில அசௌகரிய நிலைமைகளை எளிய முறையில் எம்மாலும் சரிசெய்துகொள்ள முடியும். இவை தவிர்ந்த கண்களில் ஏற்படும் சில சிக்கலான நிலைமைகளுக்கு ஓர் கண் நிபுணரின் (ophthalmologist) உதவி கட்டாயம் தேவைப்படும்.

கீழே தரப்பட்டுள்ள சில பொதுவான கண் பிரச்சினைகள் உங்களில் பலருக்கும் ஏற்பட்டு மறைந்திருக்கலாம். எனினும் இவை நீண்ட நாட்களுக்குத் தொடருமெனின், நீங்கள் கட்டாயம் ஒரு கண் வைத்தியரை அனுகி அதற்கான சிகிச்சைகளை / பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிவந்த கண்கள் (Red Eyes)
கண்களின் மேற்பரப்பின் மிகவும் சிறிய இரத்த குழாய்கள் படர்ந்து காணப்படுகின்றன. கண்களில் அரிப்பு  அல்லது தொற்று நோயின் பாதிப்பின் போது இச்சிறிய இரத்தக்குழாய்கள் விரிவடைந்து கண்கள் சிவந்து போவதற்கு காரணமாக அமைகின்றன.

பொதுவாக ஒவ்வாமை, போதிய தூக்கமின்மை, கண் களைப்பு, கண்களில் தூசி விழுதல் போன்ற காரணங்களினால் கண்கள் சிவக்கின்றன. இவை தவிர்ந்த கண் வெண்படலத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சூரிய ஒளியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பின் போதும் கண்கள் சிவந்ந்து தோற்றமளிக்கின்றன.

ஓய்வு மற்றும் எளிய முறையில் சிகிச்சையளித்தும் இந்நிலைமை மாறவில்லை எனின் கண்டிப்பாக மருத்துவ உதவியினை நாடவேண்டும்.

கண் மிதவைகள் (Eye Floaters)
நீங்கள் வானத்தை உற்றுநோக்கும் போது அல்லது வெண்ணிறமான தெளிவான திரையினை உற்றுநோக்கினால் உங்கள் பார்வையில் நீள்வடிவ (பாம்பு போன்ற) மற்றும் புள்ளிகள் போன்ற (சிலவேளைகளில் கருமையான) உருவங்கள் தோன்றுவதை நீங்கள்  சிலநேரங்களில் அவதானித்திருப்பீர்கள். நீங்கள் பார்வையினை நகர்த்தும் போது பார்வையுடன் இவ்வுருவங்களும் நகர்ந்து செல்லும். இவை என்ன என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், சிலவேளை இதற்காக நீங்கள் வைத்தியரையும் நாடியிருக்கலாம். இவை கண் மிதவைகள் (Eye Floaters) என அழைக்கப்படுகின்றன.

பொதுவாக இவை கண்ணின் உற்பகுதியில் உள்ள திரவத்தில் ஏற்படும் மாற்றங்களின் தோற்றப்பாடாகவே ஏற்படுகின்றன. கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் இவை உருவாகலாம்.

பார்வையில் சிரமங்களை ஏற்படுத்துமளவிற்கு கண் மிதவைகள் காணப்படின் லேசர் சிகிச்சை போன்ற முறைமூலம் இதற்கு சிகிச்சையளிக்கவும் முடியும். கண் மிதவைகள் இயற்கையாகவே தோன்றி மறைபவை என்பதால் இவற்றிற்கு பெரிய அளவில் சிகிச்சைகள் தேவைப்படாது எனினும், பார்வையை பாதிக்கும் அளவிற்கு இவை தென்பட்டால் இவை கண் திரையில் ஏற்படும் பாதிப்புகளின் பிரதிபலிப்பாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறான நிலைமைகளின் மருத்துவ உதவியினை நாடுதல் மிக அவசியமானதாகும்.

கண் களைப்பு (Eyestrain)
நீண்ட நேர வாசிப்பு, நீண்ட நேரம் கணனியில் வேலைசெய்தல் அல்லது நீண்ட தூரத்திற்கு வாகனங்களை ஓட்டிச் செல்தல் போன்ற எதேனும் ஓர் தொடர் வேலைக்கு நீங்கள் கண்களை உபயோகப்படுத்தி இருந்தால், கண் களைப்பு எனும் இந்நிலைமையினால் நீங்கள் உணர்த்திருக்கக்கூடும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் உடலின் ஏனைய உறுப்புக்களைப் போன்றே கண்களுக்கும் சிறிது ஓய்வு கொடுத்தல் அவசியமாகிறது. ஓய்வின் பின்னர் கண்களில் இருந்து இவ்வசௌகரியமான நிலைமை அகன்றுவிடும்.

எனினும் கண்களை நீண்ட நேரம் உபயோகப்படுத்தாத நேரங்களிலும் இதுபோன்ற நிலைமை அடிக்கடி ஏற்படின் இது கண் களைப்பு தவிர்ந்த வேறு நோய் நிலமையாகவும் இருக்கலாம் என்பதால், வைத்தியரை நாடி கண்களை பரிசோசித்துக்கொள்வது மிகவும் சிறந்தது.

மாலைக்கண் (Night Blindness)
இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போதியளவு வெளிச்சம் இல்லாத போது பார்வை மங்கலாகத் தோன்றும். பொதுவாக இது ஓர் நோய் நிலைமை என்பதைவிட வேறு சில நோய்களின் / குறைபாடுகளின் அறிகுறியின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும்.

விட்டமின் A குறைபாடு, கண்புரை நோய், நீள்பார்வைக் குறைபாடு மற்றும் கூம்புகருவிழி (keratoconus) போன்ற நோய் நிலைமைகளின் தோற்றப்பாடாகவே மாலைக்கண் நோய் காணப்படும். இவற்றுக்கான முறையான சிகிச்சையின் மூலம் இந்நோயினை சரிசெய்ய முடியும்.

இருந்தபோதிலும் சனத்தொகையில் மிகச் சிறு எண்ணிக்கையில் சிலருக்கு பிறப்பின் போது இந்நோய் நிலைமை காணப்படுகிறது. இன்னும் சிலருக்கு கண்ணின் திரையில் (retina) ஏற்படும் பாதிப்புகள் காரணமாக சிகிச்சைகள் பயனளிக்காதவாறு இந்நோய் நிலைமை காணப்படும்.


தொடரும்... 
(கண்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சினைகள் - பகுதி 2)

أحدث أقدم