ஆஸ்துமா (Asthma)


ஆஸ்துமா அல்லது ஈளை நோய் என அழைக்கப்படும் இந்நோய் சுவாசக் குழாய்களில் ஏற்படும் நீண்டகால அழற்சியின் (chronic inflammation) விளைவாகவே ஏற்படுகிறது. இந்நோய் காரணமாக அதிகரித்த சளியுடன் சுவாசக் குழாய்கள் உட்பக்கம் வீக்கத்திற்குள்ளாகி சுவாசக் குழாய்களின் விட்டம் அளவில் படிப்படியாகக் குறைந்து செல்லும். இதனால் காற்றுப்பாதையில் ஏற்படும் அடைப்புக்கள் காரணமாக மூச்சுத்திணறல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அசௌகரியமான நிலைமைகள் ஏற்படலாம்.

ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகள்:
  • அதிகரித்த இருமல் (முக்கியமாக இரவு வேளைகளில்).
  • மூச்சிரைத்தல் / மூச்சுத்திணறல்.
  • மூச்சு விடுதலில் சிரமம்.
  • நெஞ்சு இறுக்கம்/வலி.
  • விரைவான களைப்பு (மூச்சுத்திணறலுடன்)

இந்நோயுள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான அறிகுறிகள் ஏற்படுவதில்லை. மேல்கூறிய அறிகுறிகளில் அனைத்தும் ஏற்படலாம் அல்லது சில அறிகுறிகள் மட்டுமே தோன்றலாம், அல்லது வித்தியாசமான வேறு அறிகுறிகளும் தோன்றலாம். இவ்வறிகுறிகள் சிலவேளைகளில் கடுமையாகவும் சிலவேளைகளில் இலேசானவையாகவும் இருக்கும்.


ஆஸ்துமாவினை ஏற்படுத்தும் காரணிகள்:
  • குளிர் காற்று.
  • தொடர் சளி / தடுமல் போன்ற சுவாசத் தொகுதி நோய்கள்.
  • மாசடைந்த வளி.
  • ஒவ்வாமை: தூசி, மகரந்தம் , செல்லப்பிராணிகளின் உரோமங்கள், கரப்பான் பூச்சியின் கழிவுகள்.
  • மன அழுத்தம்.
  • உணவு பழுதடையாமல் பாதுகாக்கும் செயன்முறையில் பயன்படும் சில சேர்வைகள்.
  • ஆஸ்துமாவினைத் தூண்டும் மருந்து வகைகள் (e.g: aspirin).

 இவை தவிர, புகைத்தல், ஒருவர் புகைத்து வெளிவிடும் புகையினை சுவாதித்தல், அதிக எடை  (overweight) மற்றும் இரத்த உறவுகளில் ஆஸ்துமா நோய் காணப்படுதல் என்பனவும் ஆஸ்துமா நோய் ஏற்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீண்ட நாட்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் திடீர் என இவ்வறிகுறிகளை உணரக்கூடும். இன்னும் சிலரில் தினம்தோறும் இந்நோயினால் அவதியுறும் நிலைமையும் காணப்படும். பலமான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களின் போது (மூச்சுத்திணறலுடன்), அல்லது சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்கள் ஏற்படும் போது இந்நோய்நிலமை மிக உக்கிரமடையும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஆஸ்துமா நோயின் இலேசான அறிகுறிகள் ஏற்படும் போது அவை சில நிமிடங்களுக்கு அல்லது சில மணித்தியாலங்களுக்கு மட்டுமே நீடிக்கும் அதன் பின் சுவாசக்குழாய்களின் அடைப்புகள் மெதுவாக நீங்கி காற்றுப்பாதை திறக்கப்படும். எனினும் இந்நோயின் கடுமையான தாக்கத்தின் போது இவ்வறிகுறிகள் மிகவும் உக்கிரமடைவதோடு இவை அதிக நேரத்திற்கு நீடிப்பதனால் உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

இலேசான அறிகுறிகள் ஏற்படும் போதே வைத்தியரை நாடி அவற்றிற்கு முறையான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதனால், இந்நோய் நிலைமை மேலும் உக்கிரமடைவதை தடுக்கலாம்.

பரிசோதனைகள்:
ஆஸ்துமா நோயினைக் கண்டறிய இரத்த பரிசோதனைகள், x-ray மற்றும் நுரையீரல் செயல்பாடு சோதனை (PFT) போ‌ன்ற ப‌ரிசோதனைக‌ள் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சை முறை:
இன்ஹேலர் (Inhalers), மாத்திரைகள், நெபுலைசர் (nebulizer), சுவாசிக்க உதவிபுரியும் இயந்திரங்கள் என  ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் அதன் உக்கிரத்தைப் பொருத்து இந்நோய்க்கான சிகிச்சை முறையும் வித்தியாசப்படும்.

மருத்துவரின் முறையான பரிந்துரைகள் மூலம் சரிவர சிகிச்சையளித்து ஆஸ்துமா நோயினை இலகுவாக் கட்டுப்படுத்த முடியும்.
أحدث أقدم