புற்று நோய் | Cancer


மனித வரலாற்றில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே புற்று நோய் காணப்பட்டாலும், கடந்த நூற்றாண்டிலேயே உண்மையில் புற்று நோய் என்றால் என்ன என்பதை மருத்துவ உலகம் சரிவர இனங்கண்டு கொண்டது.

மருத்துவத்தில் புற்று நோய்களைப் பற்றி கற்கும் இத்துறை புற்றுநோயியல் (Oncology - ஒன்கொலஜி) என அழைக்கப்படுகிறது. இத்துறையில் தேர்ச்சிபெற்ற புற்றுநோய் மருத்வர்கள் Oncologists (ஒன்கொலஜிஸ்ட்) என அழைக்கப்டுகின்றனர்.

புற்று நோய் என்பது பொதுவாக ஓர் உயிர்கொல்லி நோய் என அறியப்பட்டாலும்,  நவீன மருத்துவத்தில் புற்றுநோயியலின் வளர்ச்சி காரணமாக புற்று நோயினைக் கண்டறிதல், தடுத்தல், மற்றும் சிகிச்சை முறைகள் என்பன மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளன. இதனால் தற்காலத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பலரும் முன்னரை விட நீண்ட நாட்கள் உயிர் வாழும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனினும், சிகிச்சைகளினால் கட்டுப்படுத்த முடியாத சில வகையான புற்று நோய்கள் தொடர்ந்தும் மருத்துவ உலகத்திற்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளன.

புற்று நோய் என்றால் என்ன?

புற்றுநோய் என்பது கட்டுப்பாட்டினை மீறி எமது உடல் கலங்கள் பிரிந்து பெருகுவதால் உண்டாகும் உயிரச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஓர் நோய் நிலைமையாகும்.

வாழ்நாளில் எமது உடலில் காணப்படும் கலங்கள் பிரிகையடைத்து புதிய கலங்களை உருவாக்குகின்றன. இவ்வாறு புதிய கலங்களின் உருவாக்கமானது ஒரு கட்டுப்பாட்டின் கீழேயே நடைபெறுகிறது. எனினும் இக்கட்டுப்பாட்டினை மீறி கலங்கள் அசாதாரணமாக உருவாகி பெருகையடைவதனால் புற்று கட்டிகள் (Tumor) உருவாகின்றன.



வீரியமற்ற புற்று கட்டிகள் (Benign Tumors)

வீரியமற்ற (Benign) அல்லது புற்றுநோய் அல்லாத புற்று கட்டிகள் (Tumor) உடலின் வேறு பாகங்களுக்கு பரவுவதில்லை. இவை வேறு புற்று கட்டிகளை தோற்றுவிப்பதுமில்லை. இவற்றை உடலில் இருந்து அகற்றினால் இவை மீண்டும்தோன்றுவதில்லை.

வீரியமுடைய புற்று கட்டிகள் (Malignant Tumors)

வீரியமுடைய (Malignant) அல்லது புற்றுநோய் உடைய புற்றுக் கட்டிகள் வீரியமற்ற புற்று கட்டிகள் போலன்றி, உடல் தொழிபாடுகளை பாதிப்படையச் செய்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இவற்றின் தரம் (Grade) / நிலை (Stage) இணைப் பொறுத்து இவை உடல் பாகங்களுக்கு திசுத்தொற்று (metastasis) எனப்படும் பரவலின் மூலம் பரவிச் செல்கின்றன.

வெகு வீரிய புற்று கட்டிகள் (Invasive Tumors)

இந்நிலையில் உள்ள புற்று கட்டிகள் மற்ற செல்களுக்கு பரவிச் சென்று தாக்கும் தன்மை கொண்டவை.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வீரியமுடைய புற்று கட்டிகள் (Malignant Tumors) உடைந்து, அவற்றிலிருந்து வெளியாகும் புற்றுநோய் கலங்கள், இரத்தக் குழாய்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தின் வழியாக ஏனைய உடல் உறுப்புகளுக்கு பரவிச் சென்று அப்பகுதியில் புற்று கட்டிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு புற்று நோய் உடலின் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பரவுதல் 'திசுத்தொற்று' (metastasis - மெடாஸ்டஸிஸ்) என அழைக்கப்படுகிறது.

'புற்று நோய்' என்பது கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் 100 க்கும் மேற்பட்ட நோய்களை உள்ளடக்குகிறது, மேலும் அவை அனைத்தும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை."

புற்றுநோயின் சில முக்கிய வகைகள்

புற்றுநோயில் பல வகைகள் உண்டு, எனினும் அவற்றில் சில முக்கியமான மற்றும் பொதுவானவையாகக் காணப்படுகின்றன.

கார்சினோமா (புற்று நோய் - carcinoma)
கார்சினோமா பொதுவான ஓர் புற்று நோயாகும். இது பெருங்குடல், நுரையீரல், தோல், மார்பங்கள், சதையி போன்ற உடற்பாகங்களிலும் சுரப்பிகளிலும் ஏற்படுகிறது.

சதைப் புற்று (sarcoma)
இது பொதுவாக எலும்புகள், தசைகள், இரத்தக் குழாய்கள், கசியிழையம் போன்ற பகுதிகளில் ஏற்படுகிறது.

நிணநீர் திசுக்கட்டி (lymphoma)
இவை நிணநீர் தொகுதியில் உண்டாகும் புற்று நோய்களாகும்.

கரும் புற்று நோய் (melanoma)
கரும் புற்று நோய் (Melanoma) என்பது கரிநிறமி உயிரணுக்களில் (தோல்) ஏற்படும் தீங்குவிளைவிக்கும் புற்று நோயாகும்.

இரத்த புற்று நோய் (leukemia)
இது இரத்தத்தில் ஏற்படும் புற்று நோயாகும். இரத்தப் புற்றுநோயில் புற்றுக் கட்டிகள் தோன்றுவதில்லை.

புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை எப்படிக் குறைக்கலாம்.
  • புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கவழங்கங்களில் இருந்து மீள வேண்டும்.
  • அதிகளவு கொழுப்புள்ள உணவுகளைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கடைபிடிக்க வேண்டும்.
  • 40 வயதினைக் கடந்தவர்கள் எனின் மருத்துவரை நாடி, தங்ககளைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

(புற்று நோயின் காரணிகள், அறிகுறிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை பற்றிய கட்டுரைகள் விரைவில்...)
أحدث أقدم