அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு - Attention Deficit Hyperactivity Disorder (ADHD)


அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (Attention deficit hyperactivity disorder, சுருக்கமாகம் ADHD என அழைக்கப்படுவது சிறு வயதில் ஏற்படும் ஓர் உளவியல்சார் நோய் நிலைமையாகும். இது சிலவேளைகளில் கட்டிளமைப் பருவம் வரையும் தொடரக்கூடும்.

இந்நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாக கவனக்குறைவு மற்றும் அளவுக்கு மிஞ்சிய இயக்கம் போன்ற அறிகுறிகளை முக்கியமாக அவதானிக்க முடியும். மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒழுங்கின்மை, கவனச் சிதறல், அவதனக்குறைவு மற்றும் வயதுக்கு மீறிய உத்வேகம்/சுறுசுறுப்பு போன்ற அறிகுறிகளையும் அவதானிக்கலாம்.

கட்டிளமைப் பருவத்தை அடைந்தவர்கள் உடலில் ஓமோன்களில் ஏற்படும் மாற்றங்களுடன், கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளின் தாக்கமும் இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம். சிறுவயதிலேயே குழந்தைகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது பற்றி அறிந்துகொள்ளலாம்.

ADHD உள்ளதாக இனங்காணப்பட்ட சிறுவர்களுக்கு முறையான சிகிச்சை அவசியமானதொன்றாகும். இல்லையெனில், ADHD நோய் நிலைமையை உடைய இவர்களில் பொதுவாகவே காணப்படும் கவனச் சிதறல் மற்றும் கவனக் குறைவினால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வகுப்பறைகளில் அளவுக்கு மீறிய  உத்வேகத்துடன் செயற்படுவர் அல்லது மிகவும் மந்தமாக செயற்படுவர். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களுக்கும் இவர்களால் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படக்கூடும். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வகுப்பறையில் ஓரிடத்தில் உற்கார்ந்திருப்பதையும் பெரும் சிரமமாகக் கருதக்கூடும்.

இந்நோய் நிலைமைக்கான காரணிகளை பொருத்தமட்டில், பெரும்பாலான குறைபாட்டு நிகழ்வுகளுக்குக் காரணிகள் இதுவரையில் அறியப்படவில்லை. எனினும், புறச்சூழல் மற்றும் மரபியல் மூலகாரணிகள் இவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என இத்துறைசார் வல்லுனர்கள் நம்புகின்றனர். மேலும் தொற்றுநோய்கள் மற்றும் மூளையில் ஏற்படக்கக்கூடிய தாக்கங்களின் விளைவாகவும் இவை இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.


உளவியல் நோய்களுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் படி (DSM-IV-TR) , இக்குறைபாட்டினை அறுதியிட, ஓர் குழந்தையின் ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் 18  அறிகுறிகளில் குறைந்த பட்சம் 12 அறிகுறிகள் ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்க வேண்டும். இவற்றில்  6 அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டவையாகவும், மற்றைய 6 அறிகுறிகளும் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டவையாகவும் அமைதல் வேண்டும்.

ADHD இனை கண்டறிய மற்றும் இவற்றுக்கான முறையான சிகிச்சைக்கு ஓர் மனநல மருத்துவரின் (psychiatrist) உதவி அவசியமாகிறது. இந்நோய் நிலைமைக்கான சிகிச்சைகளாக நடத்தை சிகிச்சை (behavioral therapy) அல்லது சிலவேளைகளில் மருந்து மாத்திரைகள் அல்லது இவை இரண்டினதும் கூட்டு சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது.

அவதானம் வேண்டும்:

கட்டிளமைப் பருவம்வரை  (Teenage) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (ADHD) நோய் நிலைமை தொடரும் போது, இந்நிலைமை அவர்களின் வாழ்வில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக; அளவுக்கு மீறிய உத்வேகத்துடன் தவறான முடிவுகளை எடுத்தல், ஆபத்தான செயல்களில் வேண்டுமென்றே இறங்குதல், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் மற்றும் ஏற்கனவே போதைப்பொருள் பாவனை இருப்பின் திடீரென உயிரச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு அளவினை மீறி உபயோகித்தல், ஒழுங்கு விதிகளை மீறி வாகனங்களை செலுத்துதல் போன்ற அசாதாரண செயற்பாடுகளில் ஈடுபடலாம். எனவே இவர்களைப் பற்றி சற்று அவதானமாக இருத்தல் வேண்டும்.

அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (ADHD) நோய் நிலைமை உடைய ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பது பற்றி இன்னுமொரு பதிவில் பார்க்கலாம்.
Previous Post Next Post