ஒரே நாளில் பொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்யும் இயற்கை வைத்தியம்!


சிலருக்கு எப்போதும் தலை அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணம் எமது தலையில் உள்ள பொடுகு தான். பொடுகு என்பது தலை மேற்பரப்பின் இறந்த செல்கள் செதில் செதிலாக தலை மேற்பரப்பில் இருந்து தனியே பிரிந்து வருவதாகும்.

நீங்கள் எத்தனையோ ஷாம்பு வகைகளை உபயோகித்தும் இதற்கு பலன் கிட்டாமல் போயிருக்கலாம். தலை அரிப்பு இன்னும் அதிகமாகவும் இருக்கும். முக்கியமாக குளிர் காலங்களில் பொடுகுத் தொல்லை இன்னும் அதிகரித்துவிடும். தலையில் பொடுகு அதிகரிக்கும் போது தலைமுடியின் வேர்களும் வலிமையற்று போய்விடும். இதனால் தலை முடி சிறிது சிறிதாக உதிர்ந்து செல்ல ஆரம்பித்துவிடும்.

பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள்:
  • வறட்சியான சருமம். 
  • முறையாக தலைக்கு குளிக்காமை.
  • குளித்தும் தலையிலுள்ள சோப்பு அல்லது ஷாம்புவை கழுவி விடாமல் இருத்தல். இதனால் அவற்றிலுள்ள இரசாயனங்கள் தலையில் தங்கி பொடுகு உற்பத்தியாக வழிவகுக்கும்.
  • அளவுக்கு அதிகமான ஷாம்பு பயன்படுத்துவதும் பொடுகுத் தொல்லைக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

பொடுகை எளிமையான வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு அகற்ற முடியும் என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேப்பிலை:

ஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்:

கற்றாழையின் மேல் பகுதியை நீக்கிவிட்டு கற்றாழையின் சதை பகுதியில் உள்ள ஜெல்லினை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கற்றாழையின் பாதி அளவு போதுமானது.

வெங்காயம்:

நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

தயிர்:

இரண்டு ஸ்பூன் அளவில் தயிர் எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை:

தயார்படுத்திக்கொண்ட வேப்பிலை, கற்றாழை ஜெல் மற்றும் சின்ன வெங்காய துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரினுள் ஒன்றாக போட்டு நான்கு ஸ்பூன் அளவில் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வந்த கலவையில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் இதனை தலையில் நன்றாக தடவி ஊறவைக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு தடவி வைத்ததன் பின்னர் சிறிதளவு ஷாம்பு உபயோகித்து தலையை கழுவிவிட வேண்டும்.

(மூக்கடைத்தல் மற்றும் சைனஸ் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் 1/2 மணி நேரம் தடவி வைத்தால் போதுமானது அல்லது பிரச்சினை முடியும் வரை இதை செய்யாவிட்டாலும் நல்லது).

வாரத்தில் இரண்டு தடவை என மூன்று வாரங்களுக்கு இதனை தொடர்ந்து செய்துவர தலையில் பொடுகு காணாமல் போய்விடும், பொடுகுத் தொல்லையும் இல்லாமல் போய்விடும். தலை முடியும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
Previous Post Next Post