நிமோனியா (Pneumonia) என்றால் என்ன?


எமது நெஞ்சறையில் வலது மற்றும் இடது பக்கமாக இரண்டு சுவாசப்பைகள் / நுரையீரல்கள்  காணப்படுகின்றன. சுவாசத்தின் போது ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொக்சைடை வெளியேற்றும் செயன்முறையின் முக்கிய உறுப்பாக நுரையீரல் தொழிற்படுகிறது. நாம் ஒரு நாளைக்கு அண்ணளவாக 22,000 முறை மூச்சு விடுகிறோம், இதன் போது சுமார் 255 கன மீட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியேற்றுகிறோம்.

நிமோனியா (Pneumonia) அல்லது நுரையீரல் அழற்சி (pneumonitis) என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்று (infection) காரணமாக நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் நிலமையாகும் . இது லேசான (mild) அல்லது உக்கிரமாக (severe) தாக்கும் கட்டாயம் வைத்திய உதவியை நாடவேண்டிய ஓர் நோய் நிலைமையாகும்.

நிமோனியாவின் போது நூரையீரல்களில் காணப்படும் அல்வியோல்லி (alveoli) எனப்படும் நுண்ணிய காற்றுப்பைகளில் ஏற்படும் தொற்று காரணமாக சீதம் மற்றும் சளி போன்ற திரவங்கள் நிறைய ஆரம்பிக்கின்றன. இதனால் மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படுவதோடு போதியளவு ஓட்சிசன் இரத்தத்தை வந்தடையாமல் போகிறது.

யார் வேண்டுமானாலும் இந்நோயினால் பாதிக்கப்படலாம். எனினும் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் 65 வயதிற்கு உட்பட்ட முதியவர்களும் இந்நோயின் தாக்கத்திற்கு விரைவில் ஆளாவார்கள். இதற்குக் காரணமாக இவர்களின் நோய் எய்திர்புச் சக்தி குறைந்தளவில் காணப்படுவதனை குறிப்பிடலாம்.

நிமோனியா உங்கள் நுரையீரல்களில் ஒன்று அல்லது இரண்டையும் தாக்கக்கூடும். சிலவேளை உங்களுக்கு நிமோனியா இருந்தும் நீங்கள் அதை அறிந்திருக்கமாட்டீர்கள். நிமோனியாவின் காரணியாக பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படுமிடத்து இந்நோய் தொற்று மூலம் இன்னொருவரை சென்றடையும் தன்மை கொண்டது.

புகைத்தல், மது அருந்துதல் போன்ற முறையற்ற வாழ்க்கைப் பழங்கங்களும் ஒருவர் நிமோனியாவினால் பாதிக்கப்படும் ஆபத்தினை மேலும் அதிகரிக்கலாம்.


நிமோனியாவை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்:

- பக்டீரியா.
- வைரஸ்.
- பூஞ்சை.
- ஒட்டுண்ணிகள்.

நுரையீரலில் நிமோனியா ஏற்பட்டுள்ள பகுதி மற்றும் அது ஏற்பட ஏதுவாக இருந்த காரணம் என்பனவற்றை பொருத்து நிமோனியா வகைப்படுத்தப்படும்.

உதாரணமாக: hospital-acquired pneumonia, ventilator-associated pneumonia, community-acquired pneumonia.

நிமோனியாவின் பொதுவான அறிகுறிகள்:

- சளியுடன் தொடர்ச்சியான நீடித்த இருமல்.
- நடுங்கும் குளிர் காய்ச்சல்.
- மூச்சு விடுதலில் சிரமம்.
- நெஞ்சு வலி.
- அசதி.
- தலை வலி.
- உடல் தசைகளில் வலி.

குழந்தைகளில் தாய்ப்பால் குடிப்பதில் சிரமம், குறைந்தளவு நனவு நிலை, தொடர் வாந்தி, மயக்கம், நீல நிறத் தோல் போன்ற  மிகவும் உக்கிரமான அறிகுறிகள் ஏற்படலாம்.

சிகிச்சை முறை:

ஒருவருக்கு நிமோனியாவினை ஏற்படுத்திய காரணியைப் பொருத்து அவருக்கான சிகிச்சை முறையும் வேறுபடலாம் மற்றும் நோயின் தன்மையை பொருத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை வழங்கப்படலாம்.

பொதுவாக பக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளின் தாக்கத்தினால் ஏற்படும் நிமோனியாவிற்கு வைத்தியர்களால் ஆன்டிபயோடிக்ஸ் (antibiotics) பரிந்துரைக்கப்படும். வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் நிமோனியாவிற்கு போதிய ஓய்வெடுத்தல், அதிகளவு பானங்களை அருந்துதல் (அதிகளவு திரவங்களை உள்ளெடுத்தல்) மற்றும் காய்ச்சல் போன்ற நிலைமைகளுக்கு வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்டவாறு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளல் வேண்டும்.

இந்நோயினை குணப்படுத்த வைத்தியரினால் வழங்கப்படும் பரிந்துரைகளை கட்டாயம் முறையாக கடைபிடித்தல் வேண்டும். சிலவேளை நோய் சற்று இலேசாகிவிட்டதாக உங்களுக்குத் தோன்றினாலும், வைத்தியர் கூறும் வரை தொடர்ந்தும் மருந்து மாத்திரைகளை சரியான நேரத்திற்கு உட்கொள்ளல் வேண்டும்.

எந்த வகை நிமோனியாவினால் பாதிக்கப்பட்டாலும், உங்கள் உடலுக்கு போதியளவு ஒய்வு அவசியம் தேவைப்படுகிறது.
أحدث أقدم