காயங்களை விரைவாக குணப்படுத்துவது எப்படி?


சிறிய தோல் காயங்களில் இருந்து எலும்பு முறிவுகள் வரை காயங்கள் என்பன எமது அன்றாட வாழ்வினை பெரிதும் பாதிக்கக்கூடியவை. சில வேளைகளில் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

காயம் குணமாக எவ்வளவு காலம் தேவைப்படுகிறது?

உங்கள் காயத்தின் வகையினை பொருத்து, அது குணமாக எடுக்கும் காலமும் மாறுபடலாம். எனினும், காயம் ஏற்பட்ட இடத்தையும், பாதிக்கப்பட்ட உடல் பகுதியையும் வைத்து குறித்த காயம் குணமடைய எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை அண்ணளவாக கூறமுடியும்.

உதாரணத்திற்கு, தசைகளில் ஏற்படும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் விரைவில் குணமடைந்துவிடும் அதேவேளை தசைநார்களில் ஏற்படும் காயங்கள் குணமடைய கூடிய காலம் எடுக்கும். இவ்வாறு தசைகளுக்கும், எலும்புகளும் விரைவில் குணமடைவதற்கான காரணம், உடலில் அவற்றிற்கான குருதி வழங்கல் மிகவும் உயர் நிலையில் காணப்படுவதாகும்.

எனினும், ஒருவர் காயங்களில் இருந்து விரைவாக குணமடைவதில் வேறு சில காரணிகளிலும் பங்குவகிக்கின்றன. இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு காயங்களில் இருந்து குணமடைய எடுக்கும் காலமும் வேறுபடலாம்.

காயங்கள் விரைவாக குணமைடைவததில் பங்குகொள்ளும் காரணிகள்:

1. நோய் எதிர்ப்பு சக்தி. 

உங்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை பொருத்து,  உங்கள் காயம் குணமாகும் வேகமும் அதிகரிக்கும்.

பச்சை தாவரங்கள் மற்றும் பெரி பழங்களை அதிகளவில் உட்கொள்வதால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

2. சுய பராமரிப்பு (Self-care)

உங்கள் முழு உடலின் ஆரோக்கியமும் உங்கள் உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுதலை இன்னும் வேகமாக்கும். புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

3. போதுமான அளவு தூக்கம்

தினமும் 8 மணி நேர உறக்கமானது காயங்களை குணப்படுத்துதலை விரைவுபடுத்தும். உறக்கத்தின் போது எமது மூளை உடலை மீள்கட்டமைக்க தேவையான ஓமோன்கள் சுரத்தலை தூண்டுகிறது, மேலும் அதிகமான வெண்குருதிக் கலங்களும் உற்பத்தியாக்கப்படுகின்றன

4. உடற் பயிற்சி.

உடலில் உள்ள காயங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உங்களால் முடியுமான விதத்தில் தகுந்த ஓர் உடற் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். உடற் பயிற்சியினால் உடலின் குருதிச் சுற்றோட்டம் சீராக்கப்படுகிறது. இதனால் காயங்கள் குணமாகும் வேகமும் அதிகரிக்கும்.

5. மன அழுத்தம்

மன அழுத்தம் காயங்கள் குணமாவதை தாமதப்படுத்தும். மன அழுத்தத்தின் போது உடலில் நிகழும் இரசாயன மாற்றங்கள் காயங்கள் குணமடையும் வேகத்தை குறைக்கும். எனவே முடிந்தளவு மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.

6. ஊட்டச்சத்துகள்

புரதம், Omega-3, Zinc, வைட்டமின் A மற்றும் வைட்டமின் Cஆகிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதிலும், பாதிப்படைந்த திசுக்களை மீள்கட்டியமைப்பதிலும் முக்கிய பங்குவகிக்கின்றன. ஆகவே இவ்வூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உற்கொள்வதால் காயங்கள் குணமாதல் விரைவுபடுத்தப்படும்.
أحدث أقدم