கொரோனா வைரஸ் (COVID-19) - செய்யவேண்டிவை மற்றும் செய்யக்கூடாதவை!


சீனாவில் ஆரம்பித்து தற்போது உலக நாடெங்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் COVID-19 தொற்று ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என எல்லா கண்டங்களிலும் பரவி வருகிறது. ஏராளமானவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே நீங்கள் வசிக்கும் நாட்டில் மற்றும் பிரதேசத்தில் இது பற்றி விழிப்புடன் செயற்படுவது உங்களைப் போலவே உங்களை சுற்றியுள்ளவர்களும் இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

COVID-19 கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்? அதனை எதிர்க்க நீங்கள் எவ்வாறு உங்களை தயார்படுத்திக்கொள்ளலாம்? நீங்கள் செய்யவேண்டியவை என்ன? நீங்கள் செய்யக்கூடாதவை என்ன? இவற்றை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:
    • அடிக்கடி  உங்கள் கைகளை சவர்க்காரம் இட்டு கழுவிக்கொள்ளுங்கள். கை கழுவும் நேரம் 20 செக்கன்களுக்கு குறையாமல் இருக்குமாறு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளுங்கள். முக்கியமாக: 
        1. உணவு சமைக்க முன்னர்.
        2. உணவு உண்ண முன்னர்.
        3. கழிவறையினை பயன்படுத்திய பின்னர்.
        4. தும்மல், இருமல் மற்றும் மூக்கிலிருந்து வரும் சளி அல்லது திரவத்தினை அகற்றிய பின்னர். 
    • நோய் அறிகுறிகளை பற்றி அறிந்து வைத்திருங்கள். 
        1. காய்ச்சல்.
        2. இருமல்.
        3. சுவாசித்தலில் சிரமம்.
        4. சளி மற்றும் சுவாசப் பிரச்சினைகள்.
      நோய் அறிகுறிகள் இருப்பின் மருத்துவ உதவியை நாடுங்கள். 
    • கைகளால் அடிக்கடி கண், மூக்கு, வாய் மற்றும் முகத்தின் ஏனைய பகுதிகளை தொடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை தொட வேண்டுமெனின் கைகளை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். வைரஸ் உங்கள் கைகளில் தொற்றியிருந்தால், அது உங்கள் மூக்கு, வாய், மற்றும் கண் வழியாக உங்கள் உடலினுள் சென்று பெருகிவிடும்.
    • நீங்கள் வசிக்கும் நாட்டில் அல்லது பிரதேசத்தில் COVID-19 கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பின் பொது இடங்களையும் பிரயாணங்களையும் முடிந்தவரை தவிருங்கள். அவ்வாறான இடங்களில் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். எனினும், மாஸ்க் இணை அடிக்கடி சரி செய்ய முகத்தை தொட வேண்டாம். இதனாலும் வைரஸ் உங்கள் கண், மூக்கு மற்றும் வாய் வழியாக உடலினுள் சென்றுவிடும்.
    • நீங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர் எனின் பொது இடங்களையும் பிரயாணங்களையும் கட்டாயம் தவிருங்கள். காரணம், இதுவரை கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின் படி வயதில் முதியவர்களையும் உடல் பலவீனமானவர்களையும்,  நீரிழிவு நோய், இருதய நோய்கள் மற்றும் சுவாசத் தொகுதி சார்ந்த நோயுடைவர்களை COVID-19 கொரோனா வைரஸ் வெகு வீரியமாக தாக்கும் தன்மை கொண்டது. 
    • வெளிநாடுகளுக்கு பயணிக்கும் கட்டாய தேவை ஏற்படின், குறித்த நாட்டில் COVID-19 கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் பற்றி அறிந்து வைத்திருங்கள்.

    சீனாவுக்கு வெளியில் ஏனைய உலக நாடுகளிலும் COVID-19 கொரோனா வைரஸ் தாக்கம் வேகமடைந்ததை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பினால் முழு உலகிற்கும் இதற்கான உயர் எச்சரிக்கை (High Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாளுக்கு நாள் முழு உலகையும் வேகமாக தாக்கிக் கொண்டிருக்கும் COVID-19 கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உங்களையும் உங்களை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ள மிகவும் விழிப்புடன் செயற்படுங்கள்.
    Previous Post Next Post