நீண்ட நேரம் உட்காருவதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்களும் அவற்றை தவிர்க்க சில வழிமுறைகளும்!


இன்றைய நவீன உலகில், பல மணி நேரம் உட்கார்ந்தே செய்ய வேண்டிய வேலைகள் பலருக்கு உண்டு. இது ஆரோக்கியத்துக்கு பாதிப்பில்லாததாகத் தோன்றினாலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது நமது ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உண்மையில், சில நிபுணர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை "புதியவகை புகைபிடிப்பு (new smoking)" எனக் கூறும் அளவுக்கு இது நம் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் ஆபத்துகளில் இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து முதன்மையாக உள்ளது. நாம் உட்கார்ந்திருக்கும் போது, உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைவடைகிறது. இவ்வாறு நமது உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைவடைவது, இரத்தத்தை கொண்டுசெல்லும் தமனிகளில் (இரத்தக் குழாய்களில்) படிவுகள் உருவாக வழிவகுக்கும். இது இறுதியில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஏனைய சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

இவை தவிர, பொதுவாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்டெரோல் என்பவற்றுக்கும் காரணமாக அமையும்.

அப்படியென்றால், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை எவ்வாறு தவிர்க்கலாம்?

1. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை எழுந்து நின்று, கை மற்றும் கால்களை அசையுங்கள். சில நிமிட அசைவுகள் கூட உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

2. மதிய உணவு இடைவேளையின் போது ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்யுங்கள். அலுவலகத்துக்கு வெளியில் செல்ல முடிந்தால், சிறிது நேரம் வெளியில் நின்று சுத்தமான காற்றைப் பெறுங்கள்.

3. நின்றுகொண்டு வேலை செய்ய முடியுமான சந்தர்ப்பங்களில் சற்று நேரம் நின்றுகொண்டும், களைப்படையும் போது உட்கார்ந்தும் வேலை செய்யுங்கள்.

4. உங்கள் தினசரி வாழ்வில் உடற்பயிற்சியையும் இணைத்துக் கொள்ளுங்கள். 

5. அலுவலகத்தில் உள்ள லிஃப்டுக்கு (Lift) பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்.

6. உங்களால் தினமும் ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டாலும், உடற்பயிற்சிக்கு நேரம் கிடைக்காவிட்டாலும் சரி, எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இரவில் ஒரு சிறு நடைப்பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் அன்றாட வாழ்வில் இவ்வாறான சில எளிய மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம், நீண்ட நேரம் உட்காருவதால் உடலில் ஏற்படும் சில ஆபத்தான ஆரோக்கியப் பிரச்சினைகளைக் குறைக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அது உங்களுக்கு உதவியாக அமையலாம்.
Previous Post Next Post