முடியுரு நாடி (இதய) நோய் | Coronary Artery Disease


உடலின் ஏனைய பாகங்களைப் போலவே இதயத்தின் இயக்கத்திற்கு இதயத்தின் தசைகளுக்கு குருதி தேவைப்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான குருதியை வழங்கும் குருதிக் குழாய்கள் 'முடியுரு நாடிகள்' (coronary arteries) என அழைக்கப்படுகின்றன.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் (cholesterol) அளவு அதிகரிப்பதனால் இம்முடியுரு நாடிகளின் உற்சுவரில் கொழுப்பு (cholesterol) படிய ஆரம்பிக்கிறது.  இப்படிமங்களினால் இந்நாடிகளின் உள் விட்டம் குறைவடைந்து (atherosclerosis), இதயத் தசைகளுக்கான குருதி வழங்கல் குறைகிறது / தடைப்படுகிறது. இதனால் குறித்த நாடியில் இருந்து குருதியினைப் பெற்றுக்கொள்ளும் இதயத் தசைககளுக்குத் தேவையான ஒட்சிசன் வழங்கல் குறைவடைந்து இதயத் தசைகள் செயல் இழந்து அல்லது இதயத்தசை இறப்புக்குள்ளாகி குருதியூட்டக்குறை இதய நோய் (Ischaemic heart disease) எனும் நோய் நிலைமை உருவாகிறது. இதனால் இதயத்தின் தொழிற்பாடு பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இவ்வாறாக இதயத்தின் தொழிற்பாடு பாதிப்படையும் வகையில் முடியுரு நாடிகள் பாதிப்படைதல் முடியுரு நாடி நோய் (Coronary Artery Disease) என அழைக்கப்படுகிறது.

முடியுரு நாடி நோயின் அறிகுறிகள்:

 • நெஞ்சு வலி (முக்கியமாக இடது பக்கமாக).
 • நெஞ்சு இறுக்கம்.
 • நெஞ்சில் எரிதல் போன்ற உணர்வு.
 • நெஞ்சு அழுத்தம்.

மேலும், கை மற்றும் தோள்களிலில் வலி, மூச்சு விடுதலில் சிரமத்துடன் வியர்வை, தீடீர் என தலைச்சுற்றல் மற்றும் பார்வை மங்கல் போன்ற நிலைமைகள் ஏற்படலாம்.

இதயத் தசைகளுக்கான குருதி வழங்கல் மேலும் தடைப்பட்டால் இவ்வறிகுறிகள் மேலும் உக்கிரமடையும். இவ்வாறு குருதி வழங்கள் தொடர்ந்து தடைப்படும் போது மாரடைப்பு ஏற்படும்.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் வேறு நோய் நிலைமைகளுக்கும் காரணமாக இருக்கலாம் என்பதால் இவ்வறிகுறிகள் ஏற்பட்டவுடன் இவை இதயம் சார் பிரச்சினை என திட்டவட்டமாக கூறிவிட முடியாது. எனவே இவ்வறிகுறிகள் தோன்றுமிடத்து இயன்றவரை உங்கள் வைத்தியரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளல் முக்கியமானதாகும்.


முடியுரு நாடி நோயினை தூண்டும் காரணிகள்:

 • இரத்தத்தில் உள்ள கொழுப்பின்  (cholesterol) அளவு அதிகரித்தல்.
 • மன அழுத்தம்.
 • முறையற்ற உணவுப் பழக்கவழக்கம்.
 • உயர் குருதி அமுக்கம்.
 • புகைப் பழக்கம்.
 • அளவுக்கு மிஞ்சிய மதுப் பழக்கம்.
 • நீரிழிவு நோய்.
 • அதிக எடை.
 • உடற்பயிற்சி இன்மை.

மற்றும் வேறு சில காரணிகள் இந்நோயினைத் தூண்டுகின்றன.

முடியுரு நாடி நோய்க்கான சிகிச்சைகள்:

1. பலூன் அஞ்சியோபிளாஸ்டி (Balloon Angioplasty): 
இச்சிகிச்சை முறைமூலம் பாதிக்கப்பட்ட முடியுரு நாடியின் விட்டம் அதிகரிக்கப்படும். இம்முறை மூலம் கொழுப்புப் (cholesterol) படிமம் குறைக்கப்படும். வழக்கமாக இப்படிமுறையின் பின்பு குறித்த இடத்தில் மீண்டும் கொழுப்பு (cholesterol) படியாமல் இருக்க ஓர் ஸ்டென்ட் (stent) இடப்படும்.

2. முடியுரு நாடி பைபாஸ் அறுவை சிகிச்சை (Coronary artery bypass surgery): 
Bypass Surgery என பலராலும் பேசப்படும் இவ்வறுவை சிகிச்சை முறையானது பாதிக்கப்பட்ட முடியுரு நாடியின் குறித்த இடத்தில் உள்ள தடங்கலை அல்லது அடைப்பினை உடலின் வேறு ஒரு பகுதியில் இருந்து பெறப்பட்ட குருதிக் குழாயினைக் கொண்டு சீர்செய்வதாகும். இவ்வறுவை சிகிச்சைகாக நெஞ்சறை திறக்கப்படுவதால் இது Open Heart Surgery என அழைக்கப்படுகிறது.
[இவ்வறுவை சிகிச்சை பற்றிய விரிவான கட்டுரை விரைவில்...]

3. Enhanced external counterpulsation:
செயற்கையான தூண்டுதலின் மூலம் பாதிக்கப்பட்ட முடியுரு நாடியில் இரத்த ஓட்டத்திற்கு தடங்கல் ஏற்பட்ட இடங்களில் புதிய குருதிக் குழாய்கள் இயற்கையாக உருவாக வழிவகுக்கும் ஓர் சிகிச்சை முறையாகும்.
Previous Post Next Post